மருத்துவ குறிப்புகள்

அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.

வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.No comments:

Post a Comment