லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம்



சென்னை :லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை அண்ணா பல்கலை இ.சி.இ., மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அம்மாணவரை, துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர் சன்னிசர்மா.


அமெரிக்காவின் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இம்மாணவர், பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்தார். சன்னிசர்மா, லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.


தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் சன்னிசர்மா கூறியதாவது:


லேப்-டாப்பை பயன்படுத்தும் போது, குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் வெளியாகிறது. இந்த வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். கடந்த இரண்டு ஆண்டு முயற்சியின் மூலம் அதில் வெற்றி கண்டுள்ளேன்.இதன்படி, ஒரு வகை படிகத்தை பயன்படுத்தி, "லேப்-டாப்'பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. "பைரோ எலக்டிரிக் எபெக்ட்' என்ற முறையின்படி, வெப்ப சக்தி, மின் சக்தியாக மாற்றப்படுகிறது.லேப்-டாப் வெப்பம் மூலம் 3.8 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


இதன் மூலம், எல்.இ.டி., பல்பை எரிய வைக்க முடிகிறது. இதற்கு 300 ரூபாய் வரையே செலவானது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி லேப்-டாப்பை மீண்டும், மீண்டும் "சார்ஜ்' செய்ய முடியும்.மேலும் மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளையும் "சார்ஜ்' செய்ய முடியும். இதுமட்டுமின்றி, வாகனங்கள், விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வெப்பத்தை உருவாக்கும் கருவிகள் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.என் கண்டுபிடிப்பிற்கு, "பேடன்ட்' வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
மேலும் குளிரிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.இவ்வாறு சன்னிசர்மா கூறினார். அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் முன்பாக, மாணவர் சன்னிசர்மா தனது கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டினார். அப்போது, லேப்-டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்திலிருந்து உருவான மின்சாரம் மூலமாக, எல்.இ.டி., பல்பு எரிய வைத்து காண்பிக்கப்பட்டது.


அம்மாணவரை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.அதேபோல, ஆர்கிடெக்சர் தொடர்பான போட்டியில், "ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்' தென்மண்டல அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் பி.ஆர்க்., இறுதியாண்டு மாணவர்கள், பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார்.




நன்றி:- Tamilcnn.com

No comments:

Post a Comment