நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும், அருகாமை நிலத்திலும் அதிகம் பல மூலிகைகள் முதலுதவி செய்ய காத்திருக்கின்றன.முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கை மருந்தாய் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் தெரிந்திருக்க வேண்டும்.
ஆடாதொடை
எந்த உரமும் போடாமல்,எந்த பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்த செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து கொடிய கசப்புள்ள இந்த செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்து கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வர தயங்கும் நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியை கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
அதிமதுரம்
இனிப்பு சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும்.
திப்பிலி
சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலி கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
ஓமம்
வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்து கசாயமாக்கி சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10-மிலி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து 1/2 டம்ளர் குடிக்கச் சொல்லலாம். ஒரு கிளாஸ் பெருங்காயம் கலந்த மோரோ அல்லது ஒரு ஸ்பூன் அன்னப் பொடியோ செய்து சாப்பிடலாம்
சீரகம்
லேசான கிறுகிறுப்பு அதிக பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளை கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிட குறையும்.
வாய்விடங்கம்
வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு மிளகு சேர்த்து கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு மதிய வேளையில் மோரில் பெருங்காய தூள் போட்டு சாப்பிட தீரும்.
கடுக்காய்
விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
கற்றாழை
குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய் காலத்துவரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு வெந்தயம் பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாக கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை.
சாதிக்காய்
தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
இலவங்கப்பட்டை
பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்த பட்டையை தே நீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
No comments:
Post a Comment