மைத்ர முகூர்த்தம் மற்றும் ராசிப்படி கடன் தொல்லை தீர

மைத்ர முகூர்த்தம் கடன் தீர
இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது... ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது...
ஜாதக அமைப்பின்படி குரு மகரத்தில் நீசமாகி விரயம் அடைந்தாலும், 6-ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவை சனி பார்த்தாலும் அடைக்கமுடியாதவாறு கடன் அழுத்தும்.
செவ்வாய் தசையில் சுய புக்தி, சனி தசையில் செவ்வாய் புக்தி நடக்கும்போது, பெண்கள் மூலமாக 60% கடன் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். குரு தசை நடக்கும்போது கேது, செவ்வாய் மற்றும் ராகு புக்தியில் கடன் சுமை வரக்கூடும். சனி தசை- கேது புக்தியில், மகன் மூலமாகக் கடன் தொல்லை ஏற்படும்.ராகு தசை நடக்கும்போது... சனி, சூரியன் மற்றும் செவ்வாய் புக்தியில் 30% கடன் தொல்லை, சுற்றி உள்ள நபர்களால் ஏற்படும்.
புதன் தசை நடக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். நாம் ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்த நண்பர் அதை ஒழுங்காகக் கட்டாமல் விட்டுவிட, நாம் கட்டவேண்டிய நிலை ஏற்படும். கேது தசை- சந்திர புக்தியில் நகை மூலமாகக் கடன் வரும்.
சுக்கிர தசை- சூரிய புக்தியில் வங்கிக் கடனை அடைக்க இயலாத நிலை ஏற்படும். சனி புக்தியில் மனைவி, மகனுக்கான வைத்தியச் செலவுகளாலும், கேது புக்தியில் வண்டிகள், எருதுகள், பசுக்கள் வாங்குவதாலும் கடன் உண்டாகும். சிறிய கடன்கள் கூட அடைபடாமல், வட்டி அதிகமாகி வாட்டக்கூடும்.
குரு தசையில் (சுய புக்தியும்) அடுத்து வரும் 16 வருடங்களும், சுக்கிர தசை 20 வருடங்களும்... இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்கினால் சுக தசை காப்பாற்றும்; தப்பித்துக் கொள்ளலாம் என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சிலர் வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பி அடைக்காமல், கடன் கொடுத்த நபர் தங்கள் வீட்டுப் பக்கமே வராமல் இருக்க, துர்தேவதை பூஜைகள்கூட செய்வது உண்டு. இதுவும் தவறான செயல்பாடு. வாங்கிய கடனை இன்முகத்தோடு அடைப்பதற்கு இறைவழிபாடு செய்ய வேண்டும்.
பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். ‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்பது பழமொழி. நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.
மைத்ர முகூர்த்தமும் கடன் தீர்தலும் ‘காலம் நமக்கு தோழன், காற்றும் மழையும் நண்பன்,’ என்று ஒரு புலவர் பாடினார். இதன்படி உரிய முகூர்த்த காலங்களைக் கணிதம் செய்து பயன்படுத்தி வந்தால் எல்லா பேறுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கும், நிச்சயதார்த்தத்திற்கும் லக்கின நிர்ணய முகூர்த்தம்; குடமுழுக்கு மற்றும் பெருஞ்சாந்திகளுக்கு நேத்திர ஜீவனுடன் முகூர்த்தம்; குபேரன், லட்சுமி அருள்பெற வியாழன் அன்று (மாலை 5 – 8) குபேர முகூர்த்தம் என்று அந்தந்த வேளைகளை நாம் பயன்படுத்துகிறோம்.
அதுபோலவே, மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். தோரண கணபதியை வணங்கி விட்டு இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துங்கள். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும். வாஸ்து பூஜைக்கு ராகுகாலம், எமகண்டம் ஆகியவை விதி விலக்கு என்பதுபோல இதற்கும் விதிவிலக்கு உள்ளது.
செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.
மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.
செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.
ராசிப்படி கடன் தொல்லை தீரவைக்கும் மைத்ர முகூர்த்தம்
மேஷம்: வியாழன் காலை 9 – 10½ ;
ரிஷபம்: வெள்ளி காலை 8 – 10½;
மிதுனம்: புதன் காலை 7½ – 9;
கடகம்: திங்கள் மாலை 4½ – 6;
சிம்மம்: ஞாயிறு காலை 11 – 12½;
கன்னி: வெள்ளி மாலை 5 – 6½;
துலாம்: சனி காலை 10½ – 12½;
விருச்சிகம்: வியாழன் மாலை 3 – 5½;
தனுசு: செவ்வாய் 10½ – 12½;
மகரம்: சனி காலை 9 – 10½;
கும்பம்: திங்கள் மாலை 3 – 5½;
மீனம்: வியாழன் காலை 9 – 10½ வரை.

மைத்ர நேரம் என்பதற்கு நண்பன்போல கடன் அடைய உதவும் நல்ல நேரம் என்று பொருள். பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;

கடன் தீர்க்கும் ருணவிமோசன பூஜை...

வளர்பிறையில் வரும் செவ்வாய்க் கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி முடித்து, பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அங்கே, மணைப்பலகை ஒன்றை வைத்து, செந்நிற கோல மாவினால் 16 சங்குகள் வட்ட வடிவில் அமைவது போன்று கோலம் போட வேண்டும். சங்குகளின் மேல் நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்காணும் அங்காரக துதியைச் சொல்லவேண்டும். பின்னர், சாம்பிராணி மற்றும் குங்கிலிய தூபம் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பித்து, புஷ்பாஞ்சலியுடன் கற்பூர ஆரத்திக் காட்டி வழிபட வேண்டும்.

ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி
ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி
ஓம் முருகனின் உருவே போற்றி
ஓம் மேஷராசிப் பிரியனே போற்றி
ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி
ஓம் தென் முகத்தவனே போற்றி
ஓம் தேவியின் பிரியனே போற்றி
ஓம் பூமியின் புதல்வனே போற்றி
ஓம் சகோதர காரகனே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் ரணகாரனே போற்றி
ஓம் ருணரோக நிவாரணனே போற்றி
ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி
ஓம் மகீ சுதனே போற்றி
ஓம் நவநாயக உருவே போற்றி

பிறகு, கீழ்க்காணும் மந்திரத்தை 9 முறை கூறி, ஆத்ம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

ஓம் ரக்தமால்யாம் பரதரம் சக்திசூலகதாதரம்
சதுர்புஜம் மேஷவாகம் வரதாபய பாணினம்
ஓம் அங்காரக மகீபுத்ர பகவன் பக்தவத்ஸலக
நமோஸ்துதே மமசேஷம் ருணமாசு விமோசய!

இந்த வழிபாட்டை முறையாகச் செய்து வந்தால், வாங்கிய கடன்களை விரைவில் அடைக்க வழிபிறக்கும்.

ஓம் அகத்தீசாய நம

No comments:

Post a Comment